71. ஃபெரோஸ் காந்தி
மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் போராட்டங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு உள்ளே வெளியே என மாறிமாறி இருந்த போதிலும் நேரு குடும்பத்துப் பெண்மணிகள் தெருவில் இறங்கியது அப்பாவையும், மகனையும் பெருமை கொள்ள வைத்தது.
குறிப்பாக, கமலா நேரு தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது அலகாபாத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அலகாபாத் இளைஞர்கள் பலர் கமலா நேருவின் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். அப்படி ஈர்க்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் ஃபெரோஸ் காந்தி.
யார் இந்த ஃபெரோஸ் காந்தி? முஸ்லிம் என இன்றும் சிலரால் குறிப்பிடப்படும் ஃபெரோஸ் காந்தி உண்மையில் பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா பெயர் ஜெஹாங்கீர் ஃபரிதூன் காந்தி. தொழில்ரீதியாக மரைன் இஞ்சினியர். குஜராத் மாநிலம் பரூச் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர குடும்பம். அம்மா பெயர் ரத்திமை காந்தி. இவருக்கு பூர்வீகம் சூரத். ரத்திமையும், அவரது தங்கை ஷிரின் கோமிசரியத் இருவரும்தான் சூரத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பு முடித்த, வெகு சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய முதல் பெண்கள்.
Add Comment