65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு
தந்தையின் மரணம் என்ற சோகத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
இதற்கிடையில், காந்திஜிக்கு டெல்லியில் வைஸ்ராய் அலுவலகத்தில் இருந்து சந்திப்புக்கான அழைப்பு வந்தது. வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக காந்திஜி டெல்லி சென்றார்.
பிப்ரவரி 17-ஆம் தேதி வைஸ்ராயைச் சந்தித்தார். இந்தப் பேச்சு வார்த்தை சுமார் மூன்று வார காலம் நடந்தது. அதன் பயனாக, 1931 மார்ச் 5-ஆம் தேதி காந்திஜிக்கும், வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ‘காந்தி-இர்வின் ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது. இதனை டெல்லி ஒப்பந்தம் என்றும் சொல்வார்கள்.
காந்திஜி சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கியபின், காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியத் தரப்புக்கும், ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் இதுவே. இந்தியத் தரப்பில் காந்திஜியே முன்னின்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Add Comment