6 பகல்
போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன நேரத்தில் திரும்பிவர முக்கால்வாசி கூட ஆகவில்லை என்று ஆச்சரியப்பட்டதைப்போலவே இப்போதும் வீட்டிற்குச் சீக்கிரம் வந்து சேர்ந்துவிட்டதாகவே தோன்றிற்று.
இதற்குக் காரணம், போவது புதிய பாதை என்பதால் இருக்கலாம். இரண்டிலும் போனது இரவு என்பதால்கூட நெடுநேரம் போய்க்கொண்டே இருக்கிற உணர்வைக் கொடுத்திருக்கலாம். பழகிய இடம் பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. அடுத்து இது அடுத்தது இது என்று ஏற்கெனவே தெரிந்த இடம் நினைவிலிருந்து விரிந்தபடி இருப்பதால் சீக்கிரம் வந்துவிடுவது போன்ற பிரமை உண்டாகிறதோ என்னவோ.
ஆனால், சைக்கிளில் நெடுந்தூரம் செல்லவேண்டுமென்றால் முதலில் மறக்கவேண்டியது எதிரில் நின்று பயமுறுத்துகிற தூரத்தைத்தான் எனத் தோன்றிற்று. எந்தக் காரியத்தையும் ‘செய்கிறோம்’ என்கிற பிரக்ஞை நிலையைத் தாண்டி, அதில் கரைந்துவிடுகையில் சீக்கிரம் முடிந்துவிட்ட பிரமிப்பையும் எதையோ சாதித்துவிட்ட திருப்தியையும் அளிக்கிறது. இப்போது நினைத்துப் பார்த்தால் போனோம் வந்தோம் என்பதைத்தாண்டி என்ன பெரிதாகச் செய்துவிட்டோம் என்றுதான் தோன்றியது. ஆனால் மகாபலிபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஓட்டல் மாமல்ல பவன் எதிரில் போய் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியபோது இப்படியா இருந்தது.
Add Comment