31 வாசம்
இந்த அரண்மனையிலா தங்கப்போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது. மைசூரில்தானே மகாராஜா அரண்மனை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது பெங்களூர் அல்லவா. இங்கு ஏது அரண்மனை என யோசித்தபடி உள்ளே நுழைகையில், பெரிய வரவேற்பறையைத் தாண்டி இருந்த நீள வராண்டாவில் புதுக்கருக்கு மாறாத நீல நிற பேக் கீழே கிடந்தது. பார்த்ததுமே தெரிந்துவிட்டது அது சுஜாதாவுடையது என்று. இவ்வளவு நல்ல பேகைக்கூட எடுத்து வைக்காமல் எங்கே போய்விட்டதோ. வசதி இருந்தால் அலட்சியம் தன்னால் வந்துவிடும்போலும்.
அலுமினியக் கம்பிகளில் பொருத்தப்பட்டு, மேலே ஸ்லீப்பிங் பேகையும் அடியில் சுருட்டிய ரப்பர் பாயையும் பக்கவாட்டில் தண்ணீர் பாட்டிலையும் வைத்துத் தோள்களில் மாட்டிக்கொண்டு, முதுகில் பாரம் இருப்பதே தெரியாதபடி, அனாயாசமாகக் கைவீசி நடக்க வசதியாகப் பயணத்திற்குத் தேவையான அத்தனைப் பொருட்களையும் வைத்துக்கொள்ளக் கச்சிதமான பையுடன் நடமாடும் வீடாகக் கடந்து செல்கிற வெளிநாட்டுக்காரர்களைப் பாண்டிச்சேரியிலும் மகாபலிபுரத்திலும் பார்த்திருக்கிறான். ஒரு நாள் இல்லை ஒருநாள் இதை வாங்கிவிடவேண்டும் என்று பலமுறை ஆசைப்பட்டிருக்கிறான். கிளம்பும் முன் ஆபீஸில் ஜெட்டு மோகனிடம்கூடக் கேட்டான்.
‘அதெல்லாம் மெட்ராஸ்ல எங்கடா கிடைக்கும். வேணும்னா விட்கோல கேட்டுப்பாரு‘ என்றார்.














Add Comment