35 விருந்து
அன்றிரவு அடித்துப் போட்டாற்போலத் தூங்கினான்.
தோராயமாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருகிற பெரிய ஊர்களில் ஒரு நாள் உபரியாகத் தங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது சைக்கிள் ஓட்டுவதிலிருந்து ஓய்வு கொடுப்பதற்காக என்றுதான் ஆரம்பத்தில் எல்லோருக்கும் தோன்றியது. கடுமையான உழைப்புக்குப் பின் கிடைக்கிற ஓய்வைப் போல ‘அப்பாடா’ இன்று சைக்கிள் ஓட்டத் தேவையில்லை என்று எல்லோருக்குமே நிம்மதியாக இருந்தது என்றாலும் அதை வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வதில் – சைக்கிள் ஓட்டுவதையே பெரிய சமூக சேவையாக எண்ணிக்கொண்டிருந்த பெரும்பான்மைக்குக் கூச்சத்தையும் குற்றவுணர்வையும் கொடுப்பதாக இருந்ததால் ஜாடை மாடையாகத் தங்களுக்குள் சிரித்து மறைமுகமாக அதைக் கொண்டாடிக்கொண்டார்கள்.
கூட்டங்கள், பத்திரிகை பேட்டிகள், பாபாவைப் பார்க்க வருகிற அமைச்சர்கள், உள்ளூரில் இயங்குகிற சமூகத் தொண்டு நிறுவனங்களின் சந்திப்பு, உள்ளூர் மக்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பாபாவைக் கெளரவித்து சைக்கிள் பயணிகளை உற்சாகப்படுத்துவது, விருந்தளிப்பது என யாராரோ பங்கெடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு விஷயங்களுக்காகவும் அந்தப் பயண விடுமுறை ஓய்வு தினம், பயன்பட்டது. கூட்டங்களில், ஆளும்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிறைய சமயங்களில் அது என்ன, அங்கு என்ன நடக்கிறது, அவர்கள் எங்கே எதற்காகப் போகிறார்கள் என்பதே தெரியாமல் மைக் பிடித்து மனதில் தோன்றியதைப் பிரமுகர்கள் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்து இவனும் சுதீரும் வெறுத்துப் போய் முதல் முறையே நைஸாகக் கழன்றுகொண்டார்கள்.














Add Comment