45 எழுதல்
நடக்கும்போது தெருவில் தடுக்கி விழுந்ததைப்போலச் சட்டென எழப் பார்த்தான். அசையக்கூட முடியவில்லை. ஒன்றுமே தெரியாதபடிக்குக் கும்மிருட்டு. ஊன்றி எழ முயன்றான். இடது கை என ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. பெரிதாக எதோ ஆகிவிட்டது என்பதே அப்போதுதான் உறைக்க ஆரம்பித்தது. இடது பிருஷ்டத்தை ஒட்டிய வெளிப்புறம் விண்விண்ணென வலித்துக்கொண்டிருந்தது. இடது கால் மரத்துப் போய்விட்டதைப் போலிருந்தது. விழுந்த வாக்கில் கிடந்தவன் மெல்ல எழுந்து உட்காரக் கையை ஊன்றப் பார்த்தான். இடது கை வெலவலத்துத் துணிபோல துவண்டிருந்தது. கை உடைந்துவிட்டதா எனப் பயந்துபோய் வலது கையால் இடது கையைத் தொட்டுப் பார்த்தான். இடது கை இருப்பதையே தொடுகிற இடது கை மூலமாக மட்டுமே உணரமுடிந்தது. வலக்கையால் ஊன்றி எழப்பார்த்தான். முடியவில்லை. வலக்கையை ஊன்றி மெல்ல உட்கார மட்டுமே முடிந்தது. வலது கையால் இடதுகாலை எடுத்து நகர்த்தவேண்டியிருந்தது. இடதுகாலைத் தொடுவது எங்கோ தூரத்தில் யாருடைய காலையோ பிடிப்பதைப் போலிருந்தது. இடது பிருஷ்டம் தரையில் பட்டும் படாமலும் இருக்கும்படி ஓரளவு உட்கார முடிந்தது. கீழே கற்கள் குத்தின. பின்புறத்தை லேசாக அசக்கி வலக்கையால் கற்களைத் தடவித் தள்ளிவிட்டான். இடப்பக்கம் பாரம் விழாதபடி உட்கார்ந்து கண்களை மூடி 10 வரை என நினைத்து எண்ண ஆரம்பித்தவன் 20 வரை நிதானமாக எண்ணினான். கண்களை மெல்லத் திறந்து பார்த்தபோதும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
கொஞ்சநேரம் இருந்த வாக்கிலேயே அசையாமல் இருந்தவன், வலக்கையை நீட்டி எதாவது தட்டுப்படுகிறதா என்று சுற்றிவரத் தொடப்பார்த்தான். ஒன்றும் தட்டுப் படாததால் இருந்த வாக்கிலேயே கையைத் தரையில் வைத்துத் தடவிப் பார்த்தான். சிறிதும் பெரிதுமான கற்கள் தட்டுப்பட்டன. அழுத்திப் பார்த்தான். கல் துண்டுகளில் இருந்த சொரசொரப்பு மண் போலத் தெரிந்தது. தடவி, கல்லின் முனையைப் பலங்கொண்டமட்டும் அழுத்தியதில் தூளானதை வைத்து செங்கல் என்பது பிடிபடவும் பதற்றம் கொஞ்சம் குறைந்தது.














Add Comment