31. இருளின் சிசு
இருளின் நெப்பம் போர்த்திய குரூரம் கானெங்கும் நிறைந்திருந்தது. பூச்சிகளின் இடைவெளியில்லாத ஓசை வெளியைச் சூழ்ந்து பரவியிருந்தது. தனது மாணாக்கர்களுடன் களக்குடியிலிருந்து* அகத்திய மலை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு கந்தரத்தை* அடைந்திருந்த உதுமானி நாயனார், அனைவரையும் படுத்துறங்கச் சொல்லிவிட்டு, கந்தரத்தின் பின்புறமாக மேலேறிப் பாறையின் மையத்தில் பதுமமிட்டு அமர்ந்தார். அன்றைக்கு அவர் உறங்க வேண்டாமென்று நினைத்ததன் காரணம் வேறு. கானகத்தின் அந்தப் பகுதியில் வயவரி* நடமாட்டம் அதிகமுண்டு. ஏதேனுமொன்று வந்துவிடுமானால் துயிலில் இருக்கும் தனது மாணாக்கர்களுக்கு அது சிக்கலாகிவிடக் கூடாதென்று நினைத்தார்.
ஆனால் உறக்கம் தவிர்த்ததற்குப் பிறிதொரு காரணம் அவர் எண்ணிப் பாராதவிதமாக அமைந்துவிட்டது. அன்றைக்குத்தான் முதல் முறை அவன் நாயனாரின் கவனத்தில் தட்டுப்பட்டான். இருளடர்ந்த கானகத்தில் நாயனார் அமர்ந்திருந்த பாறையினின்று சிறிது தூரத்தில் ஒரு தருவின் உச்சிக் கிளையில் அவன் ஆசனமிட்டு அமர்ந்திருந்தான். தருக்கள் அசைந்ததொரு தருணத்தில் வானில் எழுந்த இராதினியின்* ஒளியில் அவனது தேகம் அவர் கண்ணில் பட்டது. நாயனார் திடுக்கிட்டுப் போனார்.










Add Comment