51. சிவம்
அவனது ஆவேசம், மதங்கொண்ட வேழத்தினை நிகர்த்திருந்தது. எந்நேரமும் அவன் ததும்பிக்கொண்டிருந்தான். எந்நேரமும் கொந்தளித்துக்கொண்டிருந்தான். எந்நேரமும் குமுறிக்கொண்டிருந்தான். எனக்குப் புரிந்தது. அவனை அமைதியுறச் செய்வதற்காகவே அந்தக் குகையினுள் அவர் சிறிது விஜயத்தை வைத்துவிட்டுச் சென்றிருந்தார். யாருக்குத் தெரியும்? அவன் அதை எடுத்து மெல்லத் தொடங்கினால் அது தீராமல் தோன்றிக்கொண்டே இருக்குமோ என்னவோ. ஆனால் அவன் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உண்பதற்கென அங்கிருந்த பழங்களையும் அவித்த கிழங்குகளையும் அவன் தொடவில்லை. பருகுவதற்கு ஒரு மட்பாண்டத்தில் நீர் இருந்தது. அவன் சொட்டு நீரையும் அருந்தவில்லை.
முதலில் நீ நிதானத்துக்கு வா, பிறகு வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்தச் சித்தரும் அவரது சீடரும் புறப்பட்டுச் சென்ற போதிலிருந்து அவன் தனது நிதானத்தை மேலும் மேலும் இழந்துகொண்டே இருந்தான்.
அது சிறியதொரு குகைதான். அதன் கட்டமைப்பைக் கண்டபோது இயற்கையான குகையாகத் தெரியவில்லை. சரி, சித்தருக்கு இயற்கையென்ன, இன்னொன்றென்ன. எது முடிகிறதோ அது. எது தேவையோ அது. எது அவசியமோ அது.










Add Comment