பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த இடமும் இது தான். அன்றிலிருந்து இன்று வரை என் முகவரி தத்தனேரிதான். என்னைத் தொடர்பு கொள்பவர்களுக்கு நான் கூறும் அடையாளம் ‘சுடுகாடு வாசலில் வந்து நின்று வத்தல் வியாபாரி குடோன் என்று கேளுங்கள்’ என்பதுதான்- என்கிறார் எண்பத்தாறு வயதான வற்றல் வியாபாரி டீ.பி.ராஜேந்திரன்.
மதுரையிலுள்ள சில மாநகராட்சிப் பள்ளிகளுக்குக் கட்டடம், சமையற்கூடம், உண்ணுமிடம், கழிப்பறைகள் கட்டுவதற்கு இவர் நன்கொடையாக அளித்தது எவ்வளவு தெரியுமா? 1.80 கோடி ரூபாய்! ஒரு வற்றல் வியாபாரி எப்படி இவ்வளவு தொகை, அதுவும் மாநகராட்சிப் பள்ளிக்குக் கொடுக்க முடியும் என்று கேட்டால், “என்னிடம் ஒரு வியாபாரம் இருக்கிறது தம்பி. அதில் நல்ல லாபம் வருகிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இது எனக்கும் என் குடும்பத்திற்கும் இருக்கிறது. அதற்கு மேல் என்ன வேண்டும்? வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் பெரும் பங்கை இப்படி உபயோகப் படுத்தினேன்.” என்றார்.
Add Comment