வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை ஏற்படுத்தப் போகிற நாசத்தை, அப்போது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கேரளத்தில் குறுகிய தூரத்திற்குப் பாயும் ஆறுகள் இயல்பிலேயே அதிகம். அந்நிலத்தின் தன்மை அப்படி. கடல் மட்டத்திலிருந்து 1964 அடி உயரத்திலிருந்து இருந்து பாய்ந்து வருகிறது இருவழிஞ்சி ஆறு. முண்டக்கை, சுரல்மலை போன்ற மலைக் கிராமங்களைக் கடந்து செல்லும் ஒரு சிற்றாறு. ஒரு வாரம் விடாது பெய்த மழையினால் ஊறி, இலகுவாகிப்போயிருந்த மலையின் செம்மண் அடுக்குகள், கடந்த வார மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருமழையைத் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு, மலையில் நிலச்சரிவு. இரண்டும் ஒருசேர நிகழ்ந்தால்? ஆயிரத்துத் தொண்ணூறு அடி மீட்டர்கள் உயரத்திலிருந்து அசுரவேகத்தில் மலையும், வெள்ளமும் சரிந்து வந்து கீழே இருக்கும் கிராமங்களைத் தாக்கியது. நில அதிர்வை உணர்ந்து எழுவதற்குத் தான் முண்டக்கை மக்களுக்கு நேரம் இருந்தது, என்ன நடக்கிறது என்றுணர்ந்து, அவர்கள் சுதாரிப்பதற்குள் வெள்ளம் அவர்களைத் தூக்கி வாரிக்கொண்டு போய்விட்டது. மலைகளிலிருந்து பாறைகளையும், மரங்களையும் இழுத்துக்கொண்டு வந்தது வெள்ளம். அவை முதல் கிராமத்தை அடையும் போது இரவு ஒன்றரை மணி. வீடுகளும், மக்களும், விலங்குகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வேகத்தில் பாறைகளுக்கிடையே மாட்டிக்கொண்டனர். வீடுகள் அடியோடு பெயர்ந்து தரை மட்டம் ஆனது. அந்த இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்குண்டனர். மற்றவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சியைத் தாண்டி சாலியாற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
Add Comment