Home » ஒரு குடும்பக் கதை – 169
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 169

169. சுவாமி கொடுத்த ஷாக்
திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாராணி காயத்ரி தேவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. கடுமையான வாய்ப் புண்கள் ஏற்பட்டன. அவரது குடும்ப பல் டாக்டரைச் சந்திக்க அனுமதி பெற அவர் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டி. இருந்தது. பரிசோதனைக்குப் பின் டாக்டர் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். அவருடைய கிளினிக்கிற்குச் சென்றபோது, ஆயுதம் தாங்கிய போலிஸ் படையே உடன் வந்தது.
1975 ஜூலையில் கைது செய்யப்பட்ட அவரும், அவரது மகன் பவானி சிங்கும் ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் உடல்நிலையைக் காரணம் காட்டி, தங்களைச் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இந்திரா காந்தி அவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.
காயத்ரி தேவியையும் பவானி சிங்கையும் விடுதலை செய்யும்படி இந்திரா காந்தியிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத் சிபாரிசு செய்தால் பயன் இருக்கும் என நினைத்து இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரான மவுண்ட் பேட்டன் பிரபு முயற்சி செய்தார். ஆனால், ‘இது இந்தியாவின் உள் விவகாரம், இதில் பிரிட்டன் தலையிட வேண்டாம்’ என்று ராணி எலிசபெத்துக்கு ஆலோசனை கூறப்பட்டதால் அவர் இதில் தலையிடவில்லை.உண்மையில், பிரிட்டிஷ் அரசியிடம் ‘உங்கள் சிபாரிசை எல்லாம் கேட்டு நடக்கும் மனநிலையில் இந்திரா காந்தி இப்போது இல்லை, இதில் தலையிடாமல் இருப்பதே நமக்குக் கௌரவம்’ என்று சொல்லப்பட்டது.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!