அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவருடைய இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. ஓபிஎஸ், குறுகிய காலத்திலேயே அரசியலில் உச்சத்தை அடைந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு கட்சியில் அவருடைய செல்வாக்கு சரிந்தது. அவருடைய அரசியல் வாழ்வு பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில், ஓட்டக்காரத் தேவருக்கும் பழனியம்மாளுக்கும் 1951ஆம் ஆண்டு பிறந்தார் பேச்சிமுத்து. பெற்றோர் திருவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தங்களுடைய குலதெய்வமான பேச்சியம்மனின் நினைவாக, மகனுக்கு பேச்சிமுத்து எனப் பெயரிட்டனர். பின்னாளில் பேச்சிமுத்து, தன் பெயரை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொண்டார். பொருளாதாரத்தில் பிஏ பட்டம் பெற்றபின், தன் தந்தையுடன் இணைந்து ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பிறகு சொந்தமாகப் பால் பண்ணை ஒன்றையும், நண்பர்களுடன் இணைந்து டீக்கடை ஒன்றையும் நடத்திவந்தார்.















Add Comment