59 அவரவர் உலகம்
கிடைத்த சைக்கிளைத் தனக்குத் தகுந்தாற்போல ஆக்கிக்கொண்டு என்னதான் சந்தோரில் இரவு ஓட்டிப் பார்த்துக்கொண்டாலும் காலையில் திரும்பவும் எல்லோருடனும் ரேலியில் மாலேகான் போவதற்கு முன், இடையில் பதினைந்து நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்துவிட்டதில் உள்ளூரக் கொஞ்சம் உதறலாகத்தான் இருந்தது.
பாண்டி தெருக்களின் கொறடிலோ குப்பைத் தொட்டியிலோ கால் வைத்துதான் சைக்கிள் மீது ஏறி உட்காரமுடியும் என்கிற அளவில் குள்ளமாக இருந்தவனைப் பார்த்து, ‘பத்தாங்கிளாஸ் படிக்கும்போதுதான் சைக்கிள் ஓட்டவே கத்துக்கறியே உனக்கே வெக்கமாயில்ல’ என்று பரிகாசம் செய்த பையன்களுக்கிடையில், சங்கர் என்கிற, பூனைக்கண்களுடன் இருந்த, படிப்பை நிறுத்திவிட்ட, குப்பத்திலிருந்து வந்துகொண்டிருந்த பெரிய பையன், ‘யார் என்ன சொல்லுவாங்களோனு நெனச்சுக்கிட்டிருந்தா எதையுமே செய்யமுடியாது. யார் வேணா என்ன வேணா சொல்லிக்கிட்டுப் போகட்டும்னு நீ பாட்டுக்கும் ஓட்டு. காலைத் தூக்கிப் போடக் கஷ்டமா இருக்கா, கவலையே படாம கொரங்குப் பெடல் அடி. சிரிச்சா சிரிச்சுட்டுப் போறான்னு கண்டுக்காம நீ பாட்டுக்கும் அடி. கடைசி வரை சைக்கிள் ஓட்டவே தெரியாம போய்ட்டவங்க எவ்வளவு பேர் இருக்காங்க தெரியுமா. அவங்களை நெனச்சுக்கோ. அவங்களை விட நாம மோசமானு நெனச்சுக்கிட்டா ஆட்டமேட்டிக்கா சைக்கிள் ஓட்ட வந்துரும்’ என்று சொன்னதை இப்போது நினைத்துக்கொண்டான். கூடவே ஜெயகாந்தனுக்கு இன்னமும் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதும் நினைவுக்கு வர மெலிதாக சிரித்துக்கொண்டான். சங்கர் சொன்னது எவ்வளவு உண்மை.















Add Comment