இந்தியா முழுமைக்கும் அதிகாரம் செலுத்தும் அமைப்பு மத்திய அரசு. அதன் அதிகாரத்தில் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டாட்சிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான கோரிக்கை அது. அந்த அடிப்படையில் தேசியக் கட்சிகளோடு மாநிலக் கட்சிகள் பங்கேற்கும் மத்தியில் கூட்டாட்சி என்பது தர்க்கப்பூர்வமாகச் சரியானது.
இது ஒருபுறமிருக்க, மாநில அரசிலும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அந்தக் கோரிக்கை தேசியக் கட்சிகளிடமிருந்தும் வருவதுதான் இங்கு அதிகச் சிக்கலை ஏற்படுத்துகிறது. பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் கையகப்படுத்தும் போக்கை இது ஊக்குவிக்கும் என மாநிலக் கட்சிகள் அச்சப்படுகின்றன. அந்த அச்சத்தில் நியாயம் இல்லாமல் இல்லை.
மாநில அரசுகள் மத்திய அரசைச் சார்ந்து இயங்க வேண்டிய சூழல் இங்கே இருக்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையும் மத்திய அரசிடமிருந்தே பெரும்பாலும் பெற வேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்களைப் பொறுத்தும், அரசியல் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டும் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு நடைபெறுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியிலிருந்தால் இதில் சிக்கல் ஏதும் இல்லை. தங்களது சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகாத மாநிலங்களில் ஓரவஞ்சனைக்குப் பஞ்சமில்லை. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் நிதி அதிகாரம் குறைந்திருக்கிறது என்ற விமர்சனங்களைப் புறம் தள்ளுவதற்கில்லை.















Add Comment