5 இரவு
அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள் வைத்திருந்த கூட்டம் தள்ளிப்போகிறது என்கிற தகவலைச் சொல்வதற்காக, தாம்பரம்வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பஸ் பிடித்துப் போயிருந்தது. ராஜன் சர்மா ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டிருக்கையில் காடாகக் கிடந்த தரமணிக்குச் சிலமுறை போயிருக்கிறான். மேற்கில் அண்ணாநகர் டவர் அருகில் இருந்த, இண்டியா பிஸ்டனில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் வீட்டுக்குப் போயிருக்கிறான் – பெரும்பாலும் தருமு, நம்பியுடன். ஓரிருமுறை தனியாக. அநேகமாக அண்ணா நகர்தான் மெட்ராஸுக்குள் சைக்கிளில் அவன் போயிருந்த அதிகபட்சத் தூரமாக இருக்கவேண்டும். ஆனாலும் சைக்கிள் வாங்கிய 82லிருந்து சைக்கிளில்லாமல் அவனைப் பார்க்கமுடியாது என்கிற அளவுக்கு அந்த வண்டி அவனுடைய நீட்சியாகிவிட்டிருந்தது.
ஒரே ஒருமுறை பரீக்ஷாவின் ஜன்னல் உறுப்பினரான பத்மாவின் அண்ணன் வைத்தியநாதனுடன் ராஜ்தூத்தில் பாதல் சர்க்காரின் நாடகப் பட்டரை நடந்த ஓவியர் கிராமமாக அறியப்பட்டிருந்த சோழமண்டலத்திற்குப் போயிருக்கிறான். கூடுவாஞ்சேரியும் சோழமண்டலமும் சாலைக்கு இருபுறமும் மரங்களடர்ந்து விளக்கு வைத்ததுமே கும்மிருட்டாக மாறிவிட்டிருந்தன. தாம்பரத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்குப் போன சாலை கொஞ்சம் அகலமாக இருந்தது.
சோழமண்டலம் போகையில், ‘மகாபலிபுரத்துக்கு எப்படிப் போகணும்‘ என்று கேட்டதற்கு, வைத்தி ‘இப்படீ நேரா போயிண்டே இருந்தா மகாபலிபுரம் வந்துடும். அங்கேந்து அப்படியே போயிண்டிருந்தா பாண்டிச்சேரியே வந்துடும்‘ என்று சொல்லியிருந்தது நினைவில் இருந்தது. எனவே மகாபலிபுரத்துக்குப் போக, சோழமண்டலத்திற்கு போகவேண்டும் என்று தெரிந்திருந்தாலும் வைத்தியுடன் போனது இருட்டில் என்பதால், சோழமண்டலத்திற்கு எப்படிப் போவது என்று தெரியவில்லை. டிரைவ் இன்னில் காபி குடித்தபடி ராஜனிடம் கேட்டான்.
Add Comment