8 பேச்சு
இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார் நேரு வருவார் என்பதைப்போலச் சொல்லி, அதிலிருந்து ஒரு கருத்துக்கு வந்து சேருவார். அது, அந்தச் சம்பவத்தை விவரிக்கும்போது தோன்றியதா அல்லது தோன்றிய கருத்தைச் சொல்லச் சம்பவத்தைத் தத்ரூபமாக உருவாக்கிக் காட்டுகிறாரா என்கிற பிரமிப்பை உண்டாக்கும் – ஜே ஜே என ஒருவன் ரத்தமும் சதையுமாக நிஜமாகவே இருந்தான் என்கிற உணர்வை படிப்பவனுக்குள் உண்டாக்கிவிடுவதைப்போல.
தற்கொலை செய்துகொண்ட மனைவியின் சடலம் இருக்கும் அறையில், அவர்களது வாழ்வைக் கணவன் நினைவுகூர்ந்து தனக்குத்தானே பேசிக்கொள்கிற ‘அடக்கமான பெண்’ கதையின் ஆசிரியர் குறிப்பில், தஸ்தாவெஸ்கி குறிப்பிடுவதைப்போல ‘கண்ணுக்குத் தெரியாத சுருக்கெழுத்தர்’, சுந்தர ராமசாமி பேசிக்கொண்டிருக்கையில் ஏசியின் ஸ்டெனோவைப் போல உடனுக்குடன் குட்டை நோட்டில் எடுத்துக்கொண்டிருந்தால் பிரமாதமான பல விஷயங்கள் கிடைக்கும். ஆனால் அவர் லயித்துப் பேசுவதைக் கேட்பதில் லயித்திருக்கையில் குறிப்பெடுக்கவேண்டும் என்று யாருக்குத் தோன்றும்.
இதச் சொன்னாராப்பா அதைப் பேசினாரா மாமல்லன் என்று வசந்தகுமார் கேட்கும்போது, ராமசாமி தமக்குப் பிடித்தமான சில விஷயங்களை எல்லோரிடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறாறோ; இவரும் சுகிசிவம் போன்ற ஆன்மீக மேடைப் பேச்சாளர்களைப்போலப் பேசுவதற்கென்றே செட்டு செட்டாக வைத்திருக்கிறவர்தானோ என்கிற மெல்லிய சந்தேகம் தலைகாட்டிற்று.
Add Comment