9 முகாம்
ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய வளாகம் என்று சுந்தரேசன் சொல்லியிருந்தார். தொலைவில் கடலின் இரைச்சல் கேட்பதுபோலக்கூடத் தோன்றிற்று. எனினும் ஓரங்களில் முட்செடிகளும் புதருமாக இருந்த சாலை, மணலாக இல்லாமல் வண்டி ஓட்டும் அளவுக்குக் கெட்டியாகத்தான் இருந்தது.
ரயில் நிலையத்தில் பார்த்த கன்யாகுமரி முகங்களுக்குச் சம்மந்தமேயில்லாத நான்கைந்து இளைஞர்கள் சட்டை கதர் ஜிப்பா அணிந்து, ஹேண்டில்பாரில் சிறிய தேசியக்கொடி கட்டிய புத்தம்புதுப் பளபளப்புடன் இருந்த சைக்கிள்களில் எதிரில் வந்தனர். இவனைப் பார்த்துத் தங்களுக்குள் எதோ பேசிக்கொண்டு கடந்து சென்றனர். தன்னைப்பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்கிற குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்தான். கடைசியாகப் போய்க்கொண்டிருந்தவன் – இவனைப்போலவே திரும்பிப் பார்த்தான். இவன் பார்ப்பதைப் பார்த்துச் சிரித்துக் கையசைத்தான். வண்டியின் கேரியரில் இருந்த பையில் இருந்த நிட் இண்டியாதான் இவன் நம்ம ஆள்தான் என்கிற சிநேகபாவத்தை உண்டாக்கியிருக்கவேண்டும் எனத் தோன்றவே இவனும் பதிலுக்குக் கையசைத்து வைத்தான்.
சிறிது நேரத்தில் கண்கூசும்படி வெயிலில் கடல் மினுங்கிற்று. அதே சமயம் பக்கவாட்டில் நிறையபேர் ஒரே நேரத்தில் பேசிக்கொள்வதைப்போன்ற சத்தம் வரவும் – லெர்மந்தோவின் நம் காலத்து நாயகனில் குதிரையைத் தளர்நடையில் விட்டான் என வருவதைப்போல – சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்தினான். நியாயமாகப் பார்த்தால், மகாபலிபுரத்தில் மாமல்லன் குதிரையில் வந்து போயிருப்பான் எனத் தோன்றியபோதல்லவா லெர்மெந்தோவ் நினைவுக்கு வந்திருக்கவேண்டும். ஏன் சம்பந்தமில்லாமல் இப்போது வருகிறது. எல்லாக் காலத்துக்கும் பொதுவானதைப் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டிருக்கும் இந்த சாலை காரணமாக இருக்குமோ.
Add Comment