10 ஒருங்கிணைப்பு
வடகிழக்கிலிருந்து வந்திருந்தவர்கள் உட்படப் பெண்கள் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள் போலப்பட்டது. நூற்றுக்குப் பத்து பெரிய விஷயம். நடிக்கப் பெண் கிடைக்காமல், பெண்போல இருப்பவர்கள் கிடைப்பதற்கே பரீக்ஷாவில் ஞாநி லோலோவென அலையவேண்டியிருந்ததை நினைத்துக்கொண்டான்.
பையன்களைப் போலவே பெண்களிலும் பெரும்பான்மை மராட்டிக்காரர்கள்தாம். பாபா ஆம்தே மராட்டிக்காரர் என்பதுமட்டுமின்றி தொழுநோயாளிகளுக்கு 30, 35 வருடங்களாகத் தொண்டாற்றிக்கொண்டிருப்பவர் என்பதால் அவர் மீது உண்டாகியிருந்த மதிப்பு மரியாதை காரணமாகவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை அனுப்பிவைத்திருக்கவேண்டும். மகாராஷ்டிராவில் பாபாவைத் தெரியாதவர்களே கிடையாது; மிக உயர்ந்த இடத்தில் அவரை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தார் சுந்தரேசன். அன்னை தெரசாவையும் இவரையும் ஒப்பிட்டு அவருக்கு இருந்த சர்ச் மூலம் வரக்கூடிய உலக நிதி வசதி இல்லாமலே இவர் இவ்வளவு செய்துகொண்டிருப்பது மிகப்பெரிய விஷயம் என ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருப்பதாகப் பிரக்ஞை ரவீந்திரன் சொல்லியிருந்தார். பெண்களில் ஓரிருவரை விட்டால் மற்ற அனைவரும் இவனைவிடச் சிறியவர்களாக இருந்தார்கள். மெட்ராஸிலிருந்து வந்திருப்பவன் இவன் மட்டுமே என்பதைப்போல கோடீஸ்வரி மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணாக இருந்தாள்.
‘தமிழா சார் நீங்க. சுந்தரேசன் சார் சொன்னாரு’ எனத் தொப்பையுடன் கும்பலாக வந்தவர், தம்மை மூவர்க்கு முதல்வன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். இது எப்படி காஷ்மீர் வரை வரப்போகிறது என ஆச்சரியமாக இருந்தது. எனினும் காரியத்தில் கண்ணாக,
‘சுந்தரேசன் எப்ப சொன்னாரு’ என்றான் அவர் கோபம் தணிந்திருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள.
Add Comment