17 ஏளனம்
இருள் பிரியும் சமயத்தில் கிளம்புவதற்கான விசிலை அடித்தான் அத்துல் சர்மா. அதற்குச் சற்றுமுன் வந்து சேர்ந்துகொண்டான் இவன். பாபா தேசியக் கொடியை அசைக்க, பாரத் மாதா கீ ஜே எனக் குரலெடுத்துக் கூவியபடி பயணம் தொடங்கிற்று. கும்பலில் என்ன தெரியப் போகிறது என இவன் கூச்சத்துடன் உதட்டை மட்டும் ஒப்புக்கு அசைத்துவைத்தான். பாபா ஆம்தே ஏதும் பேசினாரா இல்லை சும்மா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாரா எனத் தெரியவில்லை.
நேற்றிரவு இருந்த நிலையென்ன இன்றைய நிலையென்ன என்று நினைக்க நினைக்க இவனுக்கு நெஞ்சு முட்டித் ததும்பிற்று. இப்படியே மூட்டைக்கட்டி அனுப்பிவிடவேண்டும் என முடிவெடுக்கப்பட்ட ஒருவன் கிளம்பிவிட்டான்.
எப்போதுமே இறுதியில் வெற்றிதான் என்றாலும் இடையில் சந்திக்கவேண்டிய இடர்ப்பாடுகள்தான் எத்தனை. இலக்கியம் தவிர, ஆபீஸ் வெளியில் எனப் போகிற எல்லா இடத்திலும் ஏன் இப்படி ஆகிறது என வருத்தப்படுவதற்குப் பதிலாக, எப்போதுமே எல்லாத் தடங்கல்களையும் தாண்டி வந்துகொண்டுதானே இருக்கிறோம். இடையில் நின்றுவிடவில்லையே அது போதாதா. போராடாமல் சுலபமாகக் கிடைக்கிற வெற்றியில் – பணக்கார அப்பன் வைத்துவிட்டுப் போன சொத்தில் சுகஜீவனம் செய்பவனைப்போல – தன்னுடையதென்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது.














Add Comment