22 இடம்
ராஜபாளையத்தில் வந்து இறங்கிய உடனே, குளிக்கவேண்டும்போல் கசகசவென இருந்தது. தூறத்தொடங்கி அல்பாயுசாக நின்றுவிட்டிருந்த மழையின் புழுக்கமும் வேறு சேர்ந்துகொண்டது.
மெட்ராஸில் தினப்படி காலைக் காரியமாக இருந்த குளியல் – ரேலியில் விடியற்காலை எழுந்திருக்கவேண்டியிருந்த கட்டாயம் காரணமாக இவனுக்கு இல்லாமலே ஆகிவிட்டது. அதிகாலையின் வெடவெடக்கவைக்கும் குளிரையும் மீறி பாத்ரூம் முன் நிற்கும் நீண்ட வரிசை என்னவோ வழக்கப்படியே இருந்துகொண்டிருந்தது. குளியல் என்பது பாத்ரூம் கிடைக்கும்போது நாளின் எப்போது வேண்டுமானாலும் என்று ஆகிவிட்டிருந்தது. எப்படியும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் என்பதால் கழுவிக்கொள்வதைப் பற்றிய கவலையே இவனுக்கு இருக்கவில்லை.
குளிப்பதில் வேளை தவறுதல் என்பது போய், முதல் முறையாக நாளே தவறியபோது எழுந்த குற்றவுணர்வு மெல்ல மறைந்து வசதிப்படும்போது குளித்துக்கொள்ளலாம் என்பது சகஜமாகத் தொடங்கியிருந்தது. இவனுக்குக் குளியல் என்பது திருப்தியாக இருக்கவேண்டும். குளிக்கப் போனால் நனைந்துகொண்டே இருக்கவேண்டும். கைவிரல்களெல்லாம் ஊறி பள்ளம் பாரிக்கிற அளவில் இருந்தால்தான் குளித்த நிறைவே ஏற்படும். தினமும் ஆபீஸ் போயாக வேண்டும்; ஆபீஸில் பளிச்சென இருந்தாகவேண்டும் என்கிற நிர்பந்தம் ரேலியில் இல்லை. சைக்கிள் ஓட்டியாகவேண்டும் என்பது இங்குத் தினப்படியாக இருந்தாலும் நிலமும் பின்னணியும் நாள்தோறும் மாறிக்கொண்டே இருந்ததால் ஒவ்வொரு நாளும் புதிதாகவே இருந்தது.














Add Comment