23 மீகாய்கரு
வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் வித்யோதயாவுக்குப் பக்கவாட்டில் டுர் டுர் என ஒலியெழுப்பியபடி தெருவோர நரகலைத் தேடித் திரியும் பன்றிகளைப் பார்க்கிற அருவருப்புடன் பம்ப்செட்டில் வந்து குதித்த கும்பலை ஒப்பிட்டு அளவுகடந்த வெறுப்பு அப்பிய முகத்துடன் சுதீரிடம் சொன்னபோது,
‘பொதுவாகவே உனக்கு ஜனங்களைப் பிடிக்காதா‘ என்று கேட்டான்.
‘அப்படியில்லை…’
‘எனக்கும் பிடிக்காது. ஆனால் அதற்காக வெறுப்பதுமில்லை. இங்கிருப்பதில் பெரும்பான்மை மராட்டிக்காரர்கள். மகாராஷ்ட்ராவே கொங்க்கனை விட்டால் நீரைப் பார்ப்பதே அபூர்வம். என்கிற அளவில் இருக்கிற வறண்ட நிலம்தான். பார்த்த இடமெங்கும் ஆறாகவும் அணையாகவும் இருக்கிற கேரள் இல்லை மகாராஷ்ட்ரா. அதனால் தொட்டி நீரே அவர்களுக்கு நீச்சல் குளமாகத் தோன்றவே பாய்ந்துவிட்டிருக்கிறார்கள். எனவே உன் ஒப்பீடு கொஞ்சம் அதிகப்படியானது‘ என்றவன், இவன் எதோ சொல்ல வாயெடுக்க, ‘அதே சமயம், நானும் உன்னைப் போலவே தனியாக இருப்பதையே விரும்புகிறவன் என்பதால் என்னால் உன்னையும் புரிந்துகொள்ள முடிகிறது. நான் எதோ ஸ்பெஷல் என்று சொல்ல வருவதாக எண்ணவேண்டாம். பாம்பேக்காரர்கள் எல்லோருமே பெரும்பாலும் நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருப்பவர்கள்தான். பாம்பேவில் வேலை பார்ப்பவர்களில், பாம்பேவில் இருக்க இடமேயில்லை என்பதால் பாம்பேக்கு வெளியில் வசித்துக்கொண்டு தினமும் வந்து போகிறவர்களே நிறைய. வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படுகிற பலபேருக்கு வீடு என்பதே இரவு தூங்குவதற்கான இடம் மட்டுமே என்கிற அளவிற்கு, 8 மணி நேரம் வேலை என்றால் 6, 7 மணி நேரம் போய்வருவதிலேயே போய்விடும். நாள்தோறும் பல மைல்கள் பயணப்பட்டு பாம்பேக்கு வந்துபோகிறவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம். ஆனால் நம்பி வருகிற எல்லோருக்கும் இல்லையென்று சொல்லாமல் இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது மும்பை. பாம்பே லோக்கல் ரயில்வே பிளாட்பாரத்தில் போய் நின்றாலே போதும் டிரெயினில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் நீ சிரமப்படவேண்டியதேயில்லை. அதைக் கூடி நிற்கிற கும்பலே பார்த்துக்கொள்ளும். ஆனால், கும்பல் நெரிசல் என்று பாம்பேக்காரன் ஒருவன்கூட புலம்பிக்கொண்டிருக்கமாட்டான். பிறந்தது முதலே அவன் இப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறான். பக்கெட் நீரைப் பார்ப்பதே அதிகம் என்று இருக்கிற ஜனம் தொட்டி நீரையே நீச்சல்குளமாக எண்ணிப் பாய்ந்துவிட்டிருக்கிறது என்று அதைச் சிரித்து எடுத்துக்கொள்ளப்பார். உலகிலேயே பெரிய சேரியான தாராவியும் பாம்பேவில்தான் இருக்கிறது இந்தியாவிலேயே உயரமான கட்டடங்களும் அம்ச்சி மும்பையில்தான் இருக்கின்றன. இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற நாங்கள் 10க்குப் பத்தில்தான் பிறந்து வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்.’















Add Comment