29 பேச்சு
தமிழில் இலக்கியம் என்பதே சிறுபத்திரிகையை மட்டுமே சார்ந்ததாக இருந்தாலும் பேர் சொல்லும்படியான எழுத்தாளர்கள் கவிஞர்கள் என ஊருக்கு ஒருவராவது இருந்துகொண்டிருந்தனர் என்பதுதான் வாழையடி வாழையாய் இலக்கியத்தின் உயிரை இழுத்துப் பிடித்து வாழவைத்துக்கொண்டு இருந்திருக்கவேண்டும்.
பரீக்ஷாவில் இருந்தபோதே வாழையிலைபோல நீள வாக்கில் அச்சிடப்பட்ட பிரம்மராஜனின் அறிந்த நிரந்தரம் கவிதைத் தொகுப்பை ஞானக்கூத்தன் ஆத்மாநாம் ராஜகோபால் எனக் கூட்டமாக வந்து ஞாநியிடம் காண்பித்ததை இவன் பார்த்திருக்கிறான். புத்தகம் பார்க்க நன்றாக இருந்த அளவுக்குக் கவிதைகள் படிக்க எளிதாக இல்லை. அது பிரமிள் கவிதைகளைப் புரிந்துகொள்ள முட்டி மோதிக்கொண்டிருந்த நேரம் வேறு என்பதால் புரட்டிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
‘புக் ஈஸ் வெரி இம்ப்ரஸிவ் தேன் பொயம்ஸ்‘ என்று ஞாநி சொன்னதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என சலனமற்ற அவர்களுடைய முகங்களிலிருந்து தெரிந்துகொள்ளமுடியவில்லை. 17/2 பீட்டர்ஸ் காலனியின் மங்கலான முன் விளக்கும் பீட்டர்ஸ் ரோடின் தெருவிளக்கை மறைக்கிற அளவுக்கு அடர்த்தியாக இருந்த அசோகமரங்களுமாகச் சேர்ந்து அவர்களது முகங்களைச் சரியாகப் பார்க்க முடியாதபடி வேறு பார்த்துக்கொண்டன.















Add Comment