36 களி
வழக்கம்போல விடியற்காலை ‘லகுக ரங்கு ஏக்குகெ’ திரும்ப ஆரம்பித்துவிட்டது. கன்யாகுமரி விவேகானந்த கேந்திராவைத் தவிர தமிழகத்து ஊர்கள் எதிலும் அது பாடப்பட்டதாக இவனுக்கு நினைவில்லை.
வெள்ளை ஜிப்பா காந்திக் குல்லாவில் பள்ளியெழுச்சி பாடித் துயிலெழுப்புகிற ஷா காக்கா – பெரியப்பா என்பதைவிட அவரைத் தாத்தா என்பதே பொருத்தமாக இருக்கும். முகத்தில் இன்னும் கிழடு தட்டிவிடவில்லை என்பதால் மராத்திப் பையன்கள் அவரைக் காக்கா என்று அழைத்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுக்கும் இந்திக்கும் இருக்கிற அன்னியோன்னியம் அவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.
பெயருக்குப் பின்னால் ஷா என்று இருப்பதை வைத்து ஆரம்பத்தில் அவரை முஸ்லீம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவர் குஜராத்தி ஷா என்பது பின்னர்தான் தெரியவந்தது. கர மைதுனம் செய்துவிட்டு அடித்துப்போட்டதைப்போலப் படுத்திருப்பவனைக்கூடப் பதறியடித்துக்கொண்டு எழுந்திருக்க வைத்துவிடக்கூடிய கணீரென்ற குரல்வளம் அவருக்கு இருந்தது. திருப்பள்ளியெழுச்சிக்குச் சரியான ஆளைத்தான் பிடித்துப் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், தூக்கம் கெட்டதில் ‘ஓ ஃபக்’ என்றபடி எழுந்துகொண்டான் சுதீர் ரவுத்.














Add Comment