234 . பி.பி.சி சொன்ன செய்தி
பிரதமரின் இல்லத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையை அடையும் வரை வழிநெடுக டெல்லியின் சகஜமான போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வேண்டி இருந்தது. சுமார் ஐந்து கிலோமீட்டர் பயணம்.
காரில் இருந்த அனைவரும் கடும் அமைதியாக இருந்தார்கள். சோனியா காந்தி மெள்ள இந்திரா காந்தியின் தலையைத் தூக்கி தன் மடி மீது வைத்துக் கொண்டு, அவரை மென்மையாக வருடிக் கொடுத்தார். மருமகளின் உடை மாமியாரின் ரத்தத்தில் சிவந்தது.
இந்திரா காந்தியின் உடலோடு அந்த வெள்ளை அம்பாசிடர் கார், எய்ம்ஸ் என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையை அடைந்தபோது மணி காலை 9.32.
அரசுப் பாதுகாப்பு விதிகளின்படி, அந்த மருத்துவமனையில் இந்திரா காந்தியின் ரத்த வகையான ‘ஓ நெகடிவ்’ வகை ரத்தம் எப்போதும் கையிருப்பில் இருக்கும். மேலும் அவர் குறித்த அனைத்து மருத்துவ விவரங்களும் அங்கே பதிவாகி இருக்கும்.
இந்திரா காந்தி மருத்துவமனைக்குள் கொண்டுவரப்பட்டபோது, பணியில் இருந்த இளம் மருத்துவர்கள் அவரை அடையாளம் கண்டதும் பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றார்கள்.















Add Comment