86 எதிரி
சுஜாதாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது.
பொதுவாகக் கடிதம் எழுதுகிற பழக்கமில்லாதவன். அதற்கான அவசியமே இருந்ததில்லை. கடிதம் என்பதே கண்காணா தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கு எழுதுவதுதானே. அநேகமாக இவனுடைய நண்பர்கள் அத்தனைப்பேருமே இலக்கியவாதிகள். விட்டால் டிரைவின் கோஷ்டிகள். நினைத்தால் நேரில் போய் நிற்கிறபடி எல்லோரும் மெட்ராஸிலேயே இருந்தார்கள். எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடிகிறவர்களுக்கு ஏன் கடிதம் எழுதிக்கொண்டிருக்கவேண்டும்.
கல்லூரிச் சேர்க்கையின் போது லலிதா அத்தையின் கணவருடைய ஆழ்வார்பேட்டை பி & டி காலனி வீட்டிலிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதம்தான் அநேகமாக அவன் எழுதிய முதல் கடிதமாக இருக்கவேண்டும். அதற்கும் திட்டுதான் கிடைத்தது. கடிதத்தைத் தப்பாக எழுதியதற்காக அல்ல முகவரியைத் தவறாக எழுதி வைத்ததற்காக. அப்பா வேலை பார்த்தது செண்ட்ரல் எக்ஸைஸில். அதை சுங்க இலாகா என்று தப்பாக எழுதிவைக்கப்போய் அது பாண்டிச்சேரி துறைமுகத்தையே ஒரு சுற்று சுற்றி சி கே சக்ரபாணி ராவ் என்று ஒருவர் சுங்கத் துறை சரித்திரத்திலேயே இல்லை என்றும் சிகேசி ராவ் என்று ஒருவர் லைட் ஹவ்ஸ் பக்கத்தில் இருக்கும் செண்ட்ரல் எக்ஸைஸில் இருக்கிறார் எனவும் கண்டுபிடித்து அப்பாவின் கைக்கு வந்து சேர ஒரு மாதம் பிடித்தது.















Add Comment