நியாயத்தின் வாசல்
ஒருபுறத்திலிருந்து அலக்நந்தா நதி பச்சையும் வெளீர் நீலமும் கலந்த நிறத்தில் பெரும் ஓசையுடன் வந்தது. மறுபுறம், சாம்பல் நிறத்தில் பாகீரதி நதி மௌனமாக அசைந்து வந்து கலந்து, ஒருவித வெள்ளை நிறத்தில் கங்கையாகப் பயணித்தது.
தேவப்ரயாகை என்ற அந்த இடம், கங்கை நதியின் பிறப்பிடமாக இருந்தது. நதியின் வண்ணங்களையும் நகரத்தின் பழைமையையும் ரசித்துக் கொண்டிருந்தாள் யாஷா.
‘மகளே…’ என இந்தியில் கூப்பிடும் சத்தம் கேட்டுத் திரும்பினாள் யாஷா. ஹேம்நாத் முகர்ஜி நின்று கொண்டிருந்தார். நம்மை இறக்கிவிட்டவர் ஏன் போகாமல் நம்மைப் பின்தொடர்கிறார் என யோசித்தபடியே அவரை நோக்கிச் சில அடிகள் வைத்து முன் சென்று நின்றாள் யாஷா.
‘மகளே, உன்னைப் பார்த்தால் ஏதோ ஊர் சுற்றி வரும் பெண் போல இல்லை. நீ யார் எனத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார் ஹேம்நாத்.
‘நான் வீடும் வாசலும் இல்லாத பெண். இமயமலையை ரசிக்கும் நோக்கத்தில் வந்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் தெரிந்து கொள்ள சுவாரசியமாக எதுவும் இல்லை’ என்றாள் யாஷா.
குங்குமத் திலகம் இட்ட தனது வெண்மையான நெற்றியைச் சுருக்கி யாஷாவுக்கு அருகே நெருங்கிய ஹேம்நாத் முகர்ஜி, ‘உன்னிடம் நிறைய இருக்கிறதாகவே நினைக்கிறேன். வண்டியில் ஏறிய பிறகு நான் என் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் நீ இறங்கும்போது ஹேம்நாத் ஜி எனக் கூறினாய். என் பெயரை எப்படித் தெரிந்துகொண்டாய்?’















Add Comment