233. முப்பது தோட்டாக்கள்
அலைச்சல் மிகுந்த ஒரிசா பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய இந்திரா காந்தி மிகவும் களைப்பாக இருந்தார். ஆனாலும், தன் செயலாளர் பி.சி. அலெக்சாண்டருடன் முக்கியமான சில விஷயங்களைப் பேசி முடித்தார்.
மறுநாள் பம்பாயில் அணுசக்தி கமிஷனின் கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த அலெக்சாண்டர் விடைபெற்றுக் கொண்டார்.
அடுத்து தன் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவானை அழைத்தார். ‘நாளைக்கு மிக முக்கியமான நிகழ்ச்சிகள் தவிர மற்றவற்றையெல்லாம் ரத்து செய்துவிடுங்கள்’ என்று சொன்னார்.
இந்திரா காந்தி தூங்கச் சென்றபோது நள்ளிரவு தாண்டிவிட்டது. ஆனாலும் இந்திரா காந்திக்குத் தூக்கம் வரவில்லை. பேரக் குழந்தைகள் கார் விபத்துக்குள்ளான விஷயம் அவரைத் தூங்க விடவில்லை என்பதுதான் சரி!
பள்ளிக்கூடத்தில் இருந்து ராகுல், பிரியங்காவை அழைத்துக்கொண்டு வந்த ஜீப்பின் மீது, பக்கவாட்டு சந்து ஒன்றிலிருந்து வேகமாக வந்த ஒரு கார் மோதியது என்றால் அது எதிர்பாராத விபத்தா? திட்டமிட்ட சதியா? குழம்பினார் பாசம்மிகு பாட்டி.















Add Comment