டெல்லியின் பெரும்பான்மையான பகுதிகள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து இருக்கின்றன. கோடைக்காலத்தாலோ வறட்சியாலோ இந்நிலை ஏற்படவில்லை. டெல்லிக்குக் குடிநீரை வழங்கும் யமுனையில் போதுமான அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. ஆனால் அது நன்னீராக இல்லை என்பதுதான் சிக்கலின் ஆதாரம்.
சில நாட்களுக்கு முன்புவரை, டெல்லியில் குடிநீர்க் குழாயிலிருந்து வருவது நீர்தானா எனச் சந்தேகிக்கும் நிலை இருந்தது. கருமை நிறத்தில், மிகுந்த நாற்றமடிக்கக்கூடிய ஒரு திரவம்தான் குழாய்களில் வந்தது. நிச்சயமாக அதைக் குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. வீட்டில் இருக்கும் சுத்திகரிப்பான்களைக் கொண்டும் மக்களால் அதைச் சுத்தப்படுத்த முடியவில்லை.
டெல்லி மக்கள் மேலதிகமாகச் செலவு செய்து, தனியாரிடமிருந்து குடிநீர் கேன்களை வாங்க வேண்டியிருந்தது. அப்படிச் செலவு செய்ய இயலாத ஏழை மக்கள், அந்தக் கலப்பட நீரையே பயன்படுத்தத் தொடங்கினர். விளைவாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டனர். பலர் தற்காலிகமாகச் சொந்தக் கிராமங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். உயிரைக் காத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு இப்போதைக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.















Add Comment