தென்னை மரங்கள், வெள்ளை மணல் கடற்கரைகள், எண்ணெய் வளம் கொண்ட பசிபிக் பெருங்கடலோர கிராமம் ஓலோன். அன்று சூரியன் உதிக்க இன்னும் சில மணிநேரம் இருந்தது. திடீரென ஒரு வீட்டில் மட்டும் சலசலப்பு, கூச்சல், பதற்றம். போலிஸ் சீருடையில் ஒரு டஜன் நபர்கள் அந்த வீட்டைச் சூழ்ந்தனர். உள்ளே இருந்தது, பிரபலப் போதைப்பொருள் கும்பல் தலைவனின் தம்பி. கண்டிப்பாக என்கவுன்டர்தான் என்று சுற்றத்தார் முடிவு செய்திருப்பார்கள். அவர்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள் முக்கியத் தலை உருண்டிருந்தது.
ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று வந்தவர்களும், அரசும் மார்தட்டிக்கொள்வார்கள் என்று நினைத்தால், நடந்ததே வேறு. வந்தவர்கள் போலிஸும் இல்லை, மிலிட்டரியும் இல்லை. நுழைந்த வேகத்திலேயே ஒரே ஓட்டமாக முகத்தை மூடிக்கொண்டு ஓடியது போலிஸ் உடையில் வந்த தீவிரவாதக் கும்பல்.
இறந்தவர் பெயர் டேவிட் மாசியாஸ். வயது முப்பத்தைந்து. அவரது அண்ணன், போதைப்பொருள் கடத்தல் உலகின் முக்கியத் தலைவரான அடோல்ஃபோ மாசியாஸ் வில்லமார். பெயரே ‘லொட லொட’ என இருப்பதினாலோ என்னவோ, இவருக்கு ‘ஃபிட்டோ’ (Fito) என்ற புனைபெயரும் உண்டு.
















Add Comment