மெட்ரோ பெட்டிகள் அமைதியானவை. அவரவர் உலகத்தில் பயணியர் மூழ்கி இருப்பார்கள். தெரிந்தவர்களுடன் மட்டும் பேசிக் கொள்வார்கள். ஒரு பார்வைக்கு துக்க வீடு போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். அப்படி இருப்பதில் சில நன்மைகளும் உண்டு. சிறு ஓசைகளைக் கூடத் தெளிவாகக் கேட்க முடியும். சிறு சிறு விஷயங்களில் சிதறல் இன்றி கவனம் குவியும்.
மகளிர்ப் பெட்டிக்குள் விதவிதமான கால்களைப் பார்க்கலாம். கட்டை விரலில் தொடங்கி சுண்டு விரல்வரை சீராகச் சரிந்து செல்லும் கால்கள், வேக வைத்த பிஞ்சு நிலக்கடலை போன்ற நகங்களைக் கொண்ட கால்கள், ஈரப்பதம் கொண்டு செழிப்பாக மினுக்கும் கால்கள், உயர்ரகப் பாதுகைகளில் பாந்தமாக அமர்ந்த கால்கள், துளிப் பிசிறின்றி நகப்பூச்சு அணிந்த கால்கள்.
அலங்கார வளைவுகளுக்குள் தம்மை அடைத்துக் கொண்ட கால்கள், மெட்டிகள் பூட்டிப் பூத்துப் போன கால்கள், கட்டை விரல் ஒருபுறமும், மற்றவை எதிர்ப்புறமுமாக வளைந்த கால்கள், தோல் உரிந்து பிய்ந்து போன காலணியுடன் அசட்டையாக நிற்கும் கால்கள், கறுத்துக் காய்த்துப் போன கால்கள், சுருங்கிச் சுண்டிப் போன கால்கள்.















Add Comment