பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர் வால்டேர் இதை, ‘மற்ற நாடுகளிடம் ராணுவம் இருக்கும், ஆனால் பிரஷ்ய ராணுவத்திடம்தான் நாடே இருக்கிறது’ எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்கு, வால்டேரின் கூற்று பாகிஸ்தானுக்கு முற்றிலும் பொருந்தும் என்பதில் சந்தேகம் இருக்காது. பாகிஸ்தானில் ராணுவம் எடுப்பதுதான் இறுதி முடிவு. நீதிமன்றங்கள், ஊடகங்கள், தேர்தல் ஆணையம் எல்லோரும் பார்வையாளர்கள்தான். தன் பேச்சைக் கேட்பவர்களை ஆட்சியில் அமர்த்துவது, கேட்காதவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது, சில நேரங்களில் ராணுவத் தளபதிகளே ஆட்சியை எடுத்துக் கொள்வது போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானின் வரலாறு நெடுக நடந்துள்ளன.
பாகிஸ்தான் அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்துக்கு மேல் ராணுவத்துக்குச் செலவிடுகிறது. இது கல்வி மற்றும் சுகாதாரத்துக்குச் செலவிடுவதைவிட அதிகம். பாகிஸ்தான் ராணுவத்தின் வரம்பற்ற அதிகாரத்தையும் செலவினத்தையும் நியாயப்படுத்த, இந்தியாவைச் சமாளிப்பது, பிரிவினைவாத சக்திகளை ஒடுக்குவது, வடமேற்கு எல்லையிலுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.















Add Comment