பீர் வளர்த்த தொப்பை
1985 – திரீஸ்டன்.
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினிலிருந்து நூற்றிருபது மைல்கள் கிழக்கிலிருந்தது திரீஸ்டன் நகரம். அழகான ஏல்பே நதியின் பள்ளத்தாக்கில், செக் குடியரசின் எல்லையில் அமைந்திருந்தது. கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அடுக்ககத்தில் குடியேறினார்கள் வலோத்யா தம்பதியினர். லூத்மிலாவுக்கு இது பாதுகாப்பு உணர்வைத் தந்தது. அவர்களது இரண்டாவது மகள் காத்யா அங்கு பிறந்தாள்.
வலோத்யாவுக்குப் பெருமையாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உளவுத்துறையிலிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். யாருடைய சிபாரிசோ, வாரிசு என்ற முன்னுரிமையோ இல்லாமல் அவரது படிப்பாலும், பயிற்சிகளில் வளர்த்துக்கொண்ட திறமைகளாலும் அடைந்திருக்கும் இலக்கு இது.
அரை மில்லியன் ஊழியர்கள் பணிபுரியும் கேஜிபியில் நான்காயிரம் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். அதில் ஒருவர் வலோத்யா. எதையும் தனது திறமையால் அடைவதை விரும்புவார்.















Add Comment