அதிமுக தோன்றியது முதல் தற்போது வரை ஒரே ஒரு கொள்கையை விடாமல் கடைப்பிடிக்கிறதென்றால் அது திமுக எதிர்ப்பு என்று சந்தேகமின்றிச் சொல்லலாம். எம்ஜிஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா அந்தக் கொள்கையில் மாறாமல் இருந்தார். இன்றைக்கு அதிமுகவுக்குத் தலைமையேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அந்தக் கொள்கையில் எந்த மாற்றமுமில்லை.
திமுகவை எதிர்த்து மட்டுமே தொடங்கப்பட்ட தேமுதிக, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கிறது. அதிமுகவில் மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ஓபிஎஸ், திமுகதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் எனச் சொன்னார். இப்போது திமுகவில் இணைந்தும் விட்டார். இவை அனைத்தையும் சேர்த்து யோசித்தால் அதிமுகவின் திமுக எதிர்ப்பு தமிழக அரசியலில் எவ்வளவு வலிமையானது என்பது புரியும்.
ஜெயலலிதா இறந்தபோது அதிமுக பல குழுக்களாகச் சிதைந்து போகும் என்றார்கள். தொண்டர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு தலைவர் அந்தக் கட்சியில் இல்லை, எனவே இனி அதிமுக இல்லை என்ற கருத்தும் உருவானது. காரணம் மிக எளிமையானது. இவர்தான் என் அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா யாரையும் சொல்லவில்லை. தனக்குப் பிறகு இந்த இயக்கத்தை வழி நடத்தப்போகும் தலைவர் இவர் என எந்த வழிகாட்டுதலையும் தொண்டர்களுக்குக் கொடுக்கவில்லை. அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கான முதல் காரணம் இதுதான்.















Add Comment