04 – அதிசயங்களால் உருவான குடும்பம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியும் ஃபின்லாந்தும் முற்றுகையிட்டிருந்த நேரம். சோவியத் வீரர்கள் நகரின் எல்லையில் எதிரிகளுடன் போராட, பொதுமக்கள் நகருக்குள் பட்டினியுடன் போராடினார்கள். போர் முடிவுக்கு வந்த பின்னும் பட்டினிப் போராட்டம் முடியவில்லை. மரியா இவானோவ்னா புதினா என்ற பெண் அந்நகரின் சாலையோரம் தள்ளாடி நடந்து கொண்டிருந்தார். திடீரெனக் கீழே விழுந்தவர் எழவே இல்லை. எழுந்துகொள்ள அவரிடம் பலம் இல்லை. மயங்கியிருந்தார்.
அந்நகர மக்களுக்கு இது பழகிப்போன அன்றாட நிகழ்வு. ஏற்கெனவே சாலையோரம் வரிசையாகக் கிடத்தியிருந்த பிணங்களுடன் மரியாவைக் கிடத்தினார்கள். நாளின் இறுதியில் பிணங்களை ஏற்றிச் செல்லும் வண்டி வந்து அடுத்தடுத்த காரியங்களைப் பார்த்துக் கொள்ளும். நகருக்கு வெளியே இதற்கென வெட்டியிருந்த பெரிய குழிகள் போதுமானவையாக இருந்தன. அதிர்ஷ்டவசமாக சிறிது நேரத்தில் மரியா மயக்கம் தெளிந்து எழுந்தார். பக்கத்தில் கிடத்தியிருந்த சடலங்கள் அவருக்கு நடந்ததை உணர்த்தின. தனது நிலையை எண்ணி அழ நினைத்தார். பாவம், அதற்கும் அவரிடம் தெம்பில்லை. அவ்வழியே சென்றவர்களின் உதவியோடு எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினார்.
ரஷ்யப் புரட்சி தொடங்கிய இடம்; ரஷ்யாவின் கம்யூனிசக் கட்சியான போல்ஷ்விக்குகளின் தலைமையிடம்; பால்டிக் கடற்படையின் முக்கியத் தளம்; ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இருந்த சோவியத்தின் பிரதானத் தொழில்நகரம். ஹிட்லருக்குப் பிடிக்காத அனைத்தும் இருந்த நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்.















Add Comment