விலகவில்லை என்றால் விரட்டியடி
20-பிப்ரவரி-2014.
கீவ்,
உக்ரைன்.
முந்நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மாளிகையில் உக்ரைன் பிரதமர் விக்டர் யனுகோவிச் தனித்து விடப்பட்டிருந்தார். இன்னும் சில மணிநேரங்களில் புரட்சியாளர்கள் அதைக் கைப்பற்றிவிடுவார்கள். ஏற்கெனவே கையில் கிடைத்த ஆவணங்களைச் சாக்கில் மூட்டையாகக் கட்டி அருகிலிருந்த ஆற்றில் வீசத் தொடங்கிவிட்டார்கள். தடுக்க யாருமில்லை.
பிரதமரின் சிறப்புக் காவல்படையான பெர்கூத், சத்தமில்லாமல் அவர்களது தலைமை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார்கள். முடிந்தவரை கலவரங்களிலிருந்து ஒதுங்கியிருந்தார்கள். நாட்டிலிருந்த அரசு அலுவலகங்களுக்கும் இதே நிலைமை. ஏறக்குறைய தொண்ணூறு பேர் இறந்து போயிருந்தார்கள்.
இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது யனுகோவிச்சுக்குப் புரிந்தது. கிளம்புவதற்கு முன் அதிபர் புதினைத் தொலைபேசியில் அழைத்தார். தலைநகர் கீவ்வுக்கு அடுத்த பெரிய நகரமான கார்கீவ்வுக்குச் செல்வதாகத் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாகவே தினமும் மூன்று நான்கு முறையாவது அங்கு நடப்பதை புதினுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். உக்ரைன் கலவரத்தைச் சமாளிக்க புதின் அவருக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்.















Add Comment