தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகின. தேர்தலுக்கு முன் வெளிவந்த அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் அவை தவிடுபொடியாக்கியுள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியாக இருந்த திமுக இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஆளும்கட்சியான அதிமுக சொற்பமான இடங்களையே வென்றுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த இரு திராவிடக் கட்சிகளும் தவெகவின் வெற்றியால் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சென்னையின் 16 தொகுதிகளில் தவெக 14 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றி யாரும் எதிர்பாராத ஒன்று. 2011இல் தொடங்கி 2021 வரை மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். அவர் இம்முறை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். சென்ற தேர்தலில் ஸ்டாலின் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















Add Comment