ஒரு புதிய செயலியை நிறுவும்போது காட்டப்படும் நீளமான நிபந்தனைகளை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை; ஆரம்பகாலத்தில் தேர்தல் அறிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. காலப்போக்கில் வண்ணத் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச வாக்குறுதிகள் இடம்பெறத் தொடங்கியபோது தேர்தல் அறிக்கைகள் மக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கின.
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைக்கு அதிகம் மெனக்கெடுகின்றன. நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன. அப்படித் தரப்பட்ட வாக்குறுதிகள் தேர்தல் முடிந்த பிறகும் மீம்களாகவும் கேள்விகளாகவும் தொடர்வதைப் பார்க்க முடிகிறது. இது தவிர, தேர்தல் அறிக்கைகள் அந்தந்தக் கட்சியின் தேர்தல் முழக்கத்தையும் (Slogan), வியூகத்தையும் தீர்மானிக்கின்றன.
’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அதிமுக 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இது முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. உள்கட்சிப் பூசல்கள், கடந்தகாலத் தோல்விகள், கூட்டணிக் குழப்பங்கள் என அனைத்தையும் தாண்டித் தன் தலைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.















Add Comment