குட்டிக் கிருஷ்ணர் என்றால் தலையில் மயிலிறகுடனும், வாயில் அப்பியிருக்கும் வெண்ணெய்யுடனுமே நினைவுக்கு வருவார். கோபியரிடமிருந்து வெண்ணெய்யை மட்டுமல்லாது மனத்தையும் திருடும் குறும்புக்காரர் என்ற பெயரெடுத்தவர். குட்டிக் கிருஷ்ணர் திருடிய வெண்ணெய்ப் பானைகளை நமது காலத்தில் காண முடிவதில்லை. டேஸ்ட் ஆஃப் இந்தியா என்ற விளம்பரத்துடன் வரும் பாக்கெட் வெண்ணெய்யே நமக்கு எஞ்சியிருக்கிறது.
முதல்முறை பிரட் துண்டில் வெண்ணெய் தடவி ஊட்டியபோது நான் சாப்பிட மறுத்துவிட்டேனாம். அதில் மேலாக சர்க்கரையைத் தூவிய பிறகு நானாகவே உண்டு முடித்திருக்கிறேன். இன்று என் குழந்தைகளும் அதையே தொடர்கிறார்கள். இப்போது நான் வெண்ணெய்யின் ருசியறிந்த கிருஷ்ணையாகிவிட்டேன்.
ஓரங்களில் முறுகிய பிரட் டோஸ்ட்டை உள்ளங்கையில் ஏந்திக்கொள்ள வேண்டும். தட்டையான ஸ்பூன் அல்லது கத்தியில் வெண்ணெய்யைத் தாராளமாக எடுத்து பிரட்டுக்கு வலிக்காமல் அதன் மீது தடவ வேண்டும். வெதுவெதுப்பான பிரட்டின் சூட்டில் வெண்ணெய் உருகுவதைப் போன்ற பிரமையில் நமக்கும் எச்சிலூறும். நடுப்பகுதியில் அதிகமாகவும் ஓரங்களில் அளவாகவும் தடவ வேண்டும்.
















Add Comment