தென் அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நாடான சிலி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. வடக்கில் பெருவும், கிழக்கில் பொலிவியா மற்றும் அர்ஜென்டினாவும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் இந்நாட்டின் எல்லைகள். தென் அமெரிக்காவில் உள்ள மிகச் செழிப்பான பொருளாதாரங்களில் ஒன்று சிலியினுடையது. செம்பு மற்றும் மின்கலங்களுக்குத் தேவையான லித்தியம் ஏற்றுமதி சிலியின் மிக முக்கியமான பொருளாதாரம் ஆதாரம்.
2025ஆம் ஆண்டுக்கான சிலியின் அதிபர் தேர்தல், அதன் எதிர்கால வளர்ச்சிப் பாதையை மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்க அரசியல் போக்கின் திசையையும் தீர்மானிக்கும் தேர்தல். டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற சிலி அதிபர் தேர்தலின் இறுதிச்சுற்றில் 59 வயதான தீவிர வலதுசாரி வேட்பாளர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறார். காஸ்ட் 58% வாக்குகளுடன் வெற்றி பெற்று சிலியின் 38ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிலியில் அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மக்களாட்சி முறையைப் பின்பற்றும் சிலி நாட்டின் நாடாளுமன்றம், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரு அவைகளைக் கொண்டது. சிலி நாட்டில் வாக்குப்பதிவு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.















Add Comment