நோபல் பரிசும் ஆஸ்கர் பரிசும் வாங்கும் அளவுக்கு என்னிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், என் பயணங்களுக்கு மிகவும் அவசியமான அந்த ஒரு ‘மகா வித்தை’ மட்டும் என்னிடம் இல்லையே என்ற கவலை ஒருநாள் வந்தது.
அப்படியே கவலைப்பட்டுக்கொண்டு சும்மா இருப்பது என் ரேஞ்சுக்கு அழகல்ல என்று முடிவு செய்து, அதை எப்படியாவது கற்றுக்கொள்ள ராப்பகலாகத் தீவிரப் பயிற்சி எடுத்தேன். சரியாக இரண்டு வருடக் கடின உழைப்புக்குப் பிறகு அந்த வித்தை என் வசமாகியது.
அது என்ன பிரம்மாண்டமான வித்தை என்று யோசிக்கிறீர்களா?
என் பயணப் பெட்டிகளில் எந்தப் பொருள் எந்த மூலையில் இருக்கிறது என்பதை அணுஅணுவாக மனப்பாடம் செய்யும் மகா வித்தை!
‘அடப்போம்மா… இதெல்லாம் ஒரு திறமையா?’ என்று நீங்கள் சலித்துக்கொள்வது எனக்குத் தெரிகிறது. ஆனால் அந்த மகா வித்தையைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் அதன் அருமை புரியும்.
எப்படி கூகுள் மேப்ஸுக்கு ஒரு நகரத்தில் எந்தச் சாலையில் எவ்வளவு டிராஃபிக் நெரிசல் இருக்கிறது என்று அக்குவேறு ஆணிவேறாகத் தெரியுமோ, அதே மாதிரி என் சூட்கேஸுக்குள் எந்தப் பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் எனக்குத் துல்லியமாகத் தெரியும்.
















Add Comment