நிதித் துறைக்கான தொழில்நுட்பங்களைக் குறிக்கும் ஃபின்டெக் (Fintech) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் ஃபெம்டெக் (FemTech) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃபெம்டெக் என்பது பெண்கள் சார்ந்த, பெண்களுக்கான தொழில்நுட்பங்கள். இப்படியான நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிவந்துள்ள செயலிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி ஃப்ளோ (Flo). 2025ஆம் ஆண்டு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும், கூகுள் பிளே ஸ்டோரிலும் உடல் ஆரோக்கியம் பட்டியலில் முன்னணியில் இருப்பதும் ஃப்ளோ செயலியே. இத்தனை புகழ்பெற்ற செயலியைத் தயாரித்தது இரு ஆண்கள் என்றால் நம்பமுடிகிறதா?
ஃப்ளோ செயலியின் முக்கியமான வசதி, பெண்கள் அவர்களின் மாதவிடாய் அட்டவணையைக் கணிக்க உதவுவது. பெண் பயனர்கள் அவர்கள் உடலில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்களை உள்ளிடுவதன் மூலம் மாதவிடாய் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே ஓரளவுக்குச் சரியாகத் தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக, மாதவிடாய்ச் சுழற்சியை வைத்து எந்தெந்த நாட்களில் ‘கருமுட்டை வெளியாகும்’ (Ovulation) என்பதையும் கணித்துச் சொல்கிறது செயலி. இதனால், கர்ப்பம் தரிக்க முயல்பவர்கள் எந்த நாட்களில் உறவு கொண்டால் வாய்ப்பு அதிகம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல, கர்ப்பத்தைத் தவிர்க்க நினைப்பவர்களும் எந்த நாட்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறியவும் இது உதவுகிறது.
ஃப்ளோவின் மூன்றாவது முக்கியமான வசதி, கர்ப்ப காலக் கண்காணிப்பு. இதைப் பயன்படுத்தி, கர்ப்பமாக இருக்கும் பெண்மணி அவரின் உடலில் வாராவாரம் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதோடு கருவில் இருக்கும் குழந்தை அந்த வாரத்தில் எவ்வளவு வளர்ந்திருக்கும் போன்ற தகவல்களைப் படங்களோடு தெரிந்து கொள்ளலாம். இப்படித் தங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைச் சரியாக அறிந்து கொள்வதன் மூலம் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடிகிறது என்கிறது ஃப்ளோ நிறுவனம்.















Add Comment