பிப்ரவரி 22, 2025. நீங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதத் தொடங்கலாம் என்று ஆசிரியர் பா.ராகவனிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. அச்செய்தியைக் கேட்ட போது இருந்த இடம், சூழல், மன உணர்வை இப்போதும் நினைவுகூர முடிகிறது. பெரும்பாக்கம் கிரிக்கெட் லீக்கின் செமி ஃபைனல் ஆட்டம். டாஸ் வென்ற எங்கள் அணி பவுலிங் தேர்வு செய்திருந்தது. அணியின் பிரதானப் பந்துவீச்சாளரான நான், முதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கியிருந்தேன். எனது இரண்டாவது ஓவரில் மேலும் இருபது ரன்களைத் தானமளித்தேன். போதும் ஓய்வெடு என்று வெளியே உட்கார வைத்துவிட்டார்கள்.
அச்சமயத்தில்தான் ஆசிரியரின் செய்தி வந்திருந்தது. உடனே வீட்டுக்கு சென்று ஒரு கட்டுரையை எழுதி விட வேண்டும் என்று நிலைகொள்ளாமல் தவித்தேன். கட்டுரை எழுதுவது அவ்வளவு எளிதல்ல என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஆசிரியர் பா.ராவின் எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் இணைந்தேன். எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நாவல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமே என் ஒற்றைக் குறிக்கோளாக இருந்தது. அதுவரை, வெறும் கற்பனைகளை விஸ்தரித்து ஒரு நாவலை உருவாக்கி விடலாம் என்று எண்ணியிருந்தேன். ஒரு கதை என்றால் அதில் தொண்ணூறு சதவீதம் உண்மை இருக்க வேண்டும். கதையில் கற்பனைக்கான இடம் வெறும் பத்து சதவீதம் தான் என்று பிடறியில் அடிக்காமல் ஆசிரியர் தெளிவுபடுத்தினார்.பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்கள் நன்கு பயனளித்தன. குறிப்பாக, கட்டுரையின் சாராம்சம் குன்றாமல் மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதும் பயிற்சி, மெட்ராஸ் பேப்பருக்கு எழுதும்போது பலனளித்தது.















Add Comment