ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரமான் ஸ்தராவொய்த் மரணமடைந்துள்ளார். மாஸ்கோ நகரின் பூங்காவுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குண்டுக் காயங்களுடன் அவரது துப்பாக்கியும் அருகிலேயே கிடைத்திருப்பதால், இது தற்கொலையாக இருக்கலாம் என்று அறிவித்துள்ளார்கள். விசாரணையின் முடிவிலும் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில் தற்கொலைக்கான காரணங்களை அவர்களே தெளிவாகப் பட்டியலிட்டுவிட்டனர்.
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அன்று காலைதான் நீக்கப்பட்டிருந்தார் ரமான். அதிபர் புதினின் கையெழுத்துடன் பணிநீக்க ஆணை வந்து சேர்வதற்கு முன், விஷயம் தெரிந்து ரமான் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. குண்டுக் காயங்கள் அவரே சுட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தினாலும், இறந்த நேரம் உறுதியாகத் தெரியவில்லை. வலுக்கட்டாயமாகச் சுடப்பட்டும் சடலம் அங்குப் போடப்பட்டிருக்கலாம். ரஷ்யாவில் நிகழும் மரணங்களில் சந்தேகங்கள் எழாமல் இருந்தால்தான் சந்தேகப்பட வேண்டியிருக்கும். கொலையோ தற்கொலையோ கவனிக்கப்பட வேண்டியது அதன் காரணமே.
உக்ரைனுடனான போர் ஆகாயத்திற்கு உயர்ந்துவிட்டது. தாக்குதல்கள் ட்ரோன்கள், விமானங்கள், ஏவுகணைகள் மூலமே நடக்கின்றன. தரையில் சேதாரங்களை மட்டுமே காண முடிகிறது. இதனால் எந்நேரமும் பதற்றத்துடன் இயங்கி வருகிறது ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துக் கழகம். ரமான் இறந்த தினத்தன்று ஏறக்குறைய ஐந்நூறு விமானங்கள் ரத்தாகின. எண்பதுக்கும் மேற்பட்டவை வழிமாற்றம் செய்யப்பட்டன. இரண்டாயிரம் விமானங்கள் நாள்கணக்கில் தாமதம் ஆகியிருக்கின்றன.















Add Comment