‘எனக்குக் கதைகளைப் படிக்கவும் கேட்கவும் மிகவும் பிடிக்கும். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே நான் இந்தச் செயலியை எனக்காக உருவாக்கினேன். பிறகு, மேலும் பலரை இந்தத் தளத்தில் கொண்டுவந்தால் அவர்களும் தங்கள் கதைகளை இங்கே பகிரலாம். அப்படி நடந்தால் என்னைப் போன்ற கதை விரும்பிகளை மேலும் மகிழ்விக்கலாம் என்று தோன்றியது, அதனால் இதை வெளியிட்டேன்.’
இப்படிச் சொன்னவர் ஜுன்கூ கிம் (JunKoo Kim). தென் கொரியாவில் தொடங்கப்பட்ட இணைய காமிக்ஸ் செயலியான வெப்டூனின் (Webtoon) நிறுவனர்.
சிறு வயதில் டிங்கிள், அமர் சித்ர கதா காமிக்ஸ்களைப் படித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் நாம் வளர வளர அந்தப் பழக்கம் குறைந்திருக்கும். அதுவும் இன்றைய செல்பேசி யுகத்தில் குழந்தைகளுமே அச்சுப் புத்தகங்களைப் படிப்பது குறைந்துவிட்டது. இந்தப் போக்கை மாற்றி, உலகளவில் காமிக்ஸ் பக்கம் மீண்டும் வாசகர்களைக் கொண்டுவந்த பெருமை வெப்டூன் செயலிக்கு உண்டு. இதில் சிறுவர்களில் தொடங்கி, முதியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் படக்கதைகள் கிடைக்கிறது. ஆபாசப் படங்கள் கிடையாது. ஆனால் காதல், சண்டை பற்றிய கதைகள் உண்டு, அவை எந்தந்த வயதினருக்கு ஏற்றது என்று தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கும்.
இந்த வகை காமிக்ஸ்களுக்கு வெப்டூன்ஸ் என்று பெயர். இது வெப் (இணையம்) மற்றும் கார்ட்டூன்ஸ் (அசைவோவியம்) என்கிற ஆங்கில வார்த்தைகளின் கூட்டு. அச்சிடப்பட்ட காமிக்ஸ்களில் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்ப வேண்டும். வெப்டூன்ஸ் செல்பேசியில் மட்டுமே கிடைப்பதால் கீழிருந்து மேலாக உருட்டி ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கலாம். அதோடு படக்கதைகள் வண்ணமயமாகவும் வருகின்றன.















Add Comment