226. ஆபரேஷன் ஃபரூக் அப்துல்லா
காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, காஷ்மீருக்குரிய பாரம்பரிய உடையை அணிந்து, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, ‘என் முன்னோர்கள் காஷ்மீரிகள்; நான் காஷ்மீரின் மகள்!’ என்று உரிமை கொண்டாடினார் இந்திரா காந்தி.
ஸ்ரீநகர் பிரசாரக் கூட்டத்தில் உருது மொழியில் பேசி காஷ்மீர் முஸ்லிம்களோடு ஒட்டி உறவாடினார். ஆனால் கிராமப்புறங்களுக்குச் சென்றபோது, மக்களோடு பேச அவருக்கு காஷ்மீரி மொழி தெரியவில்லை.
ஃபரூக் அப்துல்லா, மேற்கத்திய நாகரீகத்தில் மூழ்கிய மனிதர் என்றாலும், அவரால் உருது, காஷ்மீரி இரு மொழிகளிலும் சரளமாகப் பேச முடிந்தது. அவரது கூட்டங்களுக்கு மக்கள் திரண்டனர்.
இந்திரா காந்தியின் ஒரு குறிப்பிட்ட பிரசாரக் கூட்டத்துக்கு ஐந்தாயிரம் பேர் வருவார்கள் என காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அன்று கூட்டம் நடந்த இக்பால் பார்க்கில் சில நூறு பேர்களே வந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்காரர்களும், சாதாரண உடையில் வந்த பெண் போலிஸும்தான்.















Add Comment