ஊறுகாயுடன் இந்த வருட சென்னை புத்தகக் காட்சி நம்மை வரவேற்றது. இந்தக் கட்டுரையும் புத்தகக் காட்சியை உங்களுக்கு அப்படியே அறிமுகப்படுத்தும். ஊறுகாயுடன் கடித்துக்கொள்ள டெல்லி அப்பளம் கேட்காதீர்கள். அதை உண்டு முடிக்கச் சிரமப்பட்டவர்கள் பலர் நம்மை எச்சரித்ததால் அந்த அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தோம்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி நடக்கவிருக்கும் மைதானத்தைச் செப்பனிடுகிறார்கள். பாறை நிலத்தில் விழுந்த விதைகளென அந்த முயற்சியும் வீணாகிறது. சிவப்பும் நீளமுமாக நடைபாதைக் கம்பளங்கள் அதை மூடி மறைக்கின்றன. ஆனாலும் எதிர்பாராத சில நொடி ட்ரெக்கிங் அனுபவங்களை அவை நமக்குத் தராமல் இருப்பதில்லை. நடப்பதில் சிரமமுள்ள பெரியவர்கள் கவனமாக இருப்பது அவசியமாகிறது. புத்தகம் படிக்கும் பெரும்பான்மைத் தலைமுறைக்கு இதிலாவது கருணை காட்டியிருக்கலாம்.
பத்து நுழைவாயில்களோடு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது சென்னை புத்தகக் காட்சி. சென்னையின் சாலைகளை மட்டுமல்ல, இம்முறை புத்தகக் காட்சியின் நடைபாதைகளையும் விசாலப்படுத்தியிருந்தார்கள். வார இறுதியில் குவியும் வாசகர் கூட்டத்தைச் சமாளிக்க இவை போதுமானவைதான். மற்ற நாள்களில், அரங்கத்தில் காத்திருக்கும் பதிப்பகத்தார் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உதவும்.















Add Comment