பெட்டி ஃபோர்ட்
பெண்ணாயிருப்பதாலேயே மௌனமாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை அழுத்தந்திருத்தமாக, ஆனால் மென்மையாகச் சொன்ன முதல் பெண்மணியைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். சிகாகோவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எலிசபெத் பெட்டி ப்ளுமர், மிச்சிகனில் வளர்ந்தார். நடனக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வெர்மாண்ட் சென்று படித்தார். அவரது தந்தை கார்பன் மோனாக்சைட் நச்சுக்குப் பலியானது அவரை மிகவும் பாதித்தது.
தந்தையின் மரணத்துக்குப் பின் குடும்பத்தை வறுமை சூழ்ந்தது. குடும்பத்தை ஆதரிக்க பெட்டி வேலைக்குப் போக நேர்ந்தது. மிகச் சிறந்த நடனக் கலைஞரான பெட்டி, நடன ஆசிரியராகவும், கடையில் வேலை செய்யும் பணிப்பெண்ணாகவும் சாதாரண வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
ஜெரால்ட் ஃபோர்ட்டை காதல் திருமணம் செய்ய விழைந்தார். அப்போது ஃபோர்ட் காங்கிரஸ் உறுப்பினர். திருமண நாளன்று அடுத்த தேர்தலுக்கான பரப்புரையை முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் வந்தார். 58 வருடங்கள் மனமொத்த, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள் இத்தம்பதியினர். ஜெரால்ட் ஃபோர்ட்டை மணந்து வாஷிங்டன் டி.சிக்கு வந்தனர். ஆரம்பத்தில் பெட்டிக்குத் தன் கணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதில் விருப்பம் இல்லை. ஃபோர்ட்டும் அரசியலில் அதிகக் கவனம் பெறாத, ஆர்வமில்லாத காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.















Add Comment