காலத்தின் இயக்கத்தில் பன்னிரண்டு என்ற எண்ணுக்குத் தனித்துவமான இடமுண்டு. பகலும் இரவும், மாதமும் ராசியும் பன்னிரண்டால் சுழன்று காலத்தின் முழுமையை உணர்த்துகின்றன. அந்தக் காலத்தின் நீண்ட காத்திருப்பையே குறிஞ்சி மலரும் வெளிப்படுத்துகிறது. பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து, தன் நீல மலர்ச்சியை நிலத்துக்கு வாரி வழங்குகிறது. அந்த வகையில், தற்போது மூணாறில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
ஒரு மலரைப் பார்க்க மக்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருப்பது விசித்திரமானது. தினமும் பூக்கும் செம்பருத்தியையும் மல்லிகையையும் சாதாரணமாகக் கடந்து போகிறோம். ஆனால் குறிஞ்சி, மனிதனின் அவசரங்களுக்குப் பணியாமல் தன் சொந்தக் காலக்கணக்கில் மலர்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மானியத் தாவரவியலாளர் கார்ல் சிகிஸ்முண்ட் குந்த் (Karl Sigismund Kunth) என்பவரின் நினைவாக, இச்செடிக்கு ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா (Strobilanthes kunthiana) என்று தாவரவியலில் பெயரிடப்பட்டது. ஆனால், நம் சங்க இலக்கியத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பே கபிலர் உள்ளிட்ட சங்கப் புலவர்கள் மலர்களின் அரசியாகக் குறிஞ்சியைப் பாடிவிட்டனர்; நிலத்துக்கும் அதையே பெயராகச் சூட்டி மகிழ்ந்தனர்.















Add Comment