180. ஷேக் முஜிபூர் ரஹ்மான்
இந்திரா காந்தி நெருக்கடிநிலையைத் தீவிரமாக அமல்படுத்தித் தன்னை அரசியல் ரீதியாக ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பலவகையான நடவடிக்கைகளை ஒருபக்கம் எடுத்துக் கொண்டிருக்க, இன்னொருபக்கம் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, ‘எப்படியாவது இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தே தீருவது’ என்ற ஒரே இலக்கை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண்.
1971 தேர்தல், ரே பரேலியில் இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் போட்ட வழக்கு, இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்ற அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, நெருக்கடிநிலை அறிவிப்பு, அதன் அதிகார துஷ்பிரயோகங்கள், பத்திரிகைத் தணிக்கை என்ற பாதையில் சுவாரசியமாகப் பயணித்துவிட்டதால், இந்திய சரித்திரத்தின் ஓரிரு முக்கிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளாமல் கடந்துவிட்டோம். அவற்றை இப்போது பார்த்துவிடலாமா?
அதில் மிக முக்கியமானது இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆக உருவானது. மத ரீதியாக இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த முஸ்லிம் லீக் தலைவர்கள், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள். போனால் போகிறது என்று இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்த கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசித்ததால் அதையும் உபரியாகச் சேர்த்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.















Add Comment