ஜெர்மனியின் பெர்லின், கியால் உள்ளிட்ட நகரங்களில் வீட்டிலேயே மின் உற்பத்தி செய்யும் சூரியசக்தித் தகடுகள் பிரபலமாகி வருகின்றன. அங்குள்ளவர்கள் இதை balkonkraftwerk என்கிறார்கள். அதாவது, பால்கனியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் தகடுகள்.
நம் ஊர் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருக்கும் பால்கனியில் வண்ணப் பூச்செடிகளை அடுக்கி வைப்பார்கள், துணி உலர்த்துவார்கள், சீரியல் செட் தோரணம் கட்டி அலங்கரிப்பார்கள். ஜெர்மனியிலும் அதேதான். அங்கே அவர்கள் கூடுதலாக இரண்டு சூரியசக்தித் தகடுகளையும் சேர்த்து மாட்டிவிடுகிறார்கள். அதில் உற்பத்தியாகும் மின்சக்தி அவரவர் வீட்டுச் சாதனங்களுக்கே உபயோகமாகிறது. இதன் மூலம் அவர்களால் முப்பது சதவீதம் வரை மின் கட்டணத்தை மிச்சப்படுத்தமுடிகிறது.
ஜெர்மனியின் நகரங்களில் இன்று இது இயல்பான காட்சி. பந்தக்காலில் வாழைமரத்தைக் கட்டுவதைப்போல, அடுக்குமாடி பால்கனி ரெய்லிங்கில் இரண்டு சூரியசக்தித் தகடுகளை இணைத்துக் கட்டிவிடுகின்றனர். அதனுடன் வரும் மைக்ரோ இன்வெர்ட்டரை வீட்டினுள் பிளக்-இன் செய்துவிட்டால்போதும். இன்வெர்ட்டர், சூரிய ஒளியில் உற்பத்தியாகும் டிசி (DC) கரண்ட்டை வீட்டு மின் உபயோகச் சாதனங்களை இயக்கும் AC வகை மின்சாரமாக மாற்றிக் கொடுக்கும்.
















Add Comment